Monday, February 6, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்திரண்டு.

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --எழுபத்திரண்டு.

श्री ராமர் எல்லோரையும் பார்த்தார். அவர்கள் எல்லோரும் சித்திரத்தில் எழுதப்பட்டதுபோல் இருப்பதைப் பார்த்து சீதையைபார்த்தார். சீதையின் முகத்தில் படர்ந்திருந்த கவலையைப் பார்த்தார். சீதையின் கவலையால் ஒரு நொடியும் ஒரு பெரிய   யுகம் போல் தோன்றியது.
 தாகமுள்ள  மனிதன் தண்ணீரின்றி உயிரைத் துறந்துவிட்டால்  அவனின் மரணத்திற்குப்பின் அமிர்தமான தண்ணீருள்ள  குளம் என்ன செய்யமுடியும் ?

வயல்கள் காய்ந்த பிறகு மழையால் என்ன பயன் ?
காலம் கடந்தபின் வருந்தி என்ன பயன் ?
மனதில் இவ்வாறு நினைத்து ஸ்ரீ ராமர் சீதையைப் பார்த்தார்.
அவருடைய சிறப்பான அன்பைப் பார்த்து ஆனந்தமடைந்தார்.
 மனதில் குரூ வணக்கம் செய்து  விட்டு  வில்லை எடுத்தார்.
அவர் வில்லை கையில் எடுத்ததும் வில் மின்னல் போல் மின்னியது. பிறகு ஆகாயத்தில் ஒரு மண்டலம் போல் தோன்றியது.
எடுத்ததை,  ஏற்றியதை  ,பலமாக இழுத்ததை யாரும் பார்க்கவில்லை. அவ்வளவு விரைவாக ராமர் செயலில் ஈடுபட்டார். எல்லோரும் வில்லுடன் இருக்கும் ராமரைப் பார்த்தனர். உடனே ராமர் வில்லை இரண்டாக உடைத்தார்.
பயங்கரமான ஓசை உலகம் முழுவதும் கேட்டது.
அந்த ஓசை கேட்டு சூரியனின் ரதத்தின் குதிரைகள் அதிர்ந்து திசை மாறி சென்றன. திக்குகளின் யானைகள் பிளிறின.
பூமி அசைந்தது. சேஷன், வராஹன், ஆமை  போன்றவை துடித்தன. ராமர் வில்லை உடைத்ததுமே
ராமரின் ஜயகோஷம் முழங்கியது என துளசிதாசர் சொல்கிறார்.
  சிவனின் வில்  கப்பல். ராமரின் புஜபலம் கடல். வில்லை முறித்ததுமே, மோகத்தின்  வசத்தால் அதில் ஏறியவர்கள் அனைவரும்   மூழ்கிவிட்டனர்.

ஸ்ரீ ராமச்சந்திர பிரபு வில்லின் துண்டுகளை பூமியில் போட்டுவிட்டார். இதைப்பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
  ராமர் என்ற முழு நிலவைப்பார்த்து ஆனந்த அலைகள் முன்னேறின.  விண்ணில் முரசுகள் முழங்கின. தேவலோகத்து தேவ கன்னிகள் பாட்டுப்பாடினர்.நடனம் ஆடினர். பிரம்மா முதலிய தேவர்கள், சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள்,அனைவரும் ஸ்ரீ ராமரைப் புகழ்ந்தனர். அவர்கள் பலவண்ண பூக்களின் மாலைகளை பொழிந்தனர். சிவகணங்கள் ரசமான பாடல்களைப் பாடினர். பிரம்மாண்டம் முழுதும் ஜெயா கோஷங்கள் முழங்கின.
எல்லோரும் ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் கூறினார்--ஸ்ரீ ராமர் சிவதனுஷை முறித்துவிட்டார். தீரமும் ஆய்வும் உள்ள பாடகர்கள்  இசைப்பவர்கள் ,கவிஞர்கள் ராமரின் புகழை வர்ணிக்கத் தொடங்கினர். ஜால்ரா, மிருதங்கம்,சங்கு ,மிருதங்கம்,சஹாநாயி ,முரசு ,பெரிய மத்தளங்கள்  போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அனைத்து இடங்களிலும் பெண்கள் மங்கள இசை இசைத்தனர்.
தோழிகளுடன் ராணி மிக மகிழ்ந்தாள். காய்ந்த நெல் செடியில் தண்ணீர் பாய்ச்சியதுபோல்  மகிழ்ந்தனர். நீந்தி நீந்தி களைத்த மனிதனுக்கு கரை கிடைத்ததுபோல்
மகாராஜா ஜனகர் மகிழ்ந்தார்.
  வில்லை முறித்ததும்  போட்டிக்கு வந்த அரசர்கள் முகக்கலை   இழந்தனர். அவர்கள் முகம் பகலில் விளக்கு வெளிச்சம் அழகை இழப்பதுபோல் அவர்கள் முகம் ஒளி இழந்தது.
சாதகப் பறவை சுவாதி நக்ஷத்திரத்தின் தண்ணீர்  பெற்றது போன்ற  ஆனந்தம்   சீதைக்கு . அந்த பேரானந்தத்தை
எப்படி வர்ணிப்பது?

நிலவை  சக்ரவாகப் பறவையின் குஞ்சு பார்ப்பதுபோல்
லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரை பார்த்துக்கொண்டிருந்தான்.
  அப்பொழுது சதானந்தனின் கட்டளை பெற்று சீதை ராமரை நோக்கிச் சென்றாள்.
 சீதையுடன் அவளின் கெட்டிக்காரியான  தோழிகள்
மங்களமான பாட்டுக்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
 சீதை அன்னப்பறவையின் குஞ்சு நடை நடந்துகொண்டிருந்தாள்.
அவரின் அங்கங்களில் அபூர்வமான அழகு மிளிர்ந்தது.
   அழகான   தோழிகளுக்கு நடுவில்  சீதை மிக அழகாகக் காட்சி அளித்தார். கையில் அழகான வெற்றிமாலை  ,அதில்
வையகத்தை வென்ற அழகு தென்பட்டது.
 சீதையின் உடலில்  வெட்கம் ,தயக்கம் , ஆனால்  மனதில்
அதிக மிகவும் உற்சாகம் இருந்தது.
அவருடைய இந்த கடுமந்தண அன்பு  வெளியில் தெரியவில்லை.
ஸ்ரீ ராமருக்கு  அருகில்  சென்று , ஓவியத்தில்  வரையப்பட்ட ஓவியம் போல் பிரமித்து நின்றாள். அப்பொழுது தோழிகள் சீதையிடம்  ஜெயமாலை  அணிவிக்கும் படி கூறினர்.
இதைக் கேட்டும் சீதை ஜெயமாலையை அன்பின் அதிக தாக்கத்தால் அணிய வில்லை. அப்பொழுது சீதையின் அழகு
    இரு  தாமரை  மலர்கள்  தாமரைத்தண்டுகளுடன்
ஜெயமாலை  கொடுப்பதுபோல்  சீதையின் கரங்கள் அழகாக இருந்தன.
இந்த அழகை  வர்ணித்து தோழிகள் பாட்டுப்பாடினார்.
அப்பொழுது சீதை ஸ்வயம்வர வெற்றிமாலையை ராமருக்கு
அணிவித்தார்.
ராமரின் மார்பில் வெற்றி மாலை விழுந்ததுமே  தேவர்கள்
பூ மாரி பொழிந்தனர். மற்றாரசர்கள் முகம் சூரியனைப்பார்த்த அல்லி மலர்கள் போல் வாடின.
நகரத்திலும் ஆகாயத்திலும்  வாத்தியங்கள் முழங்கின.
துஷ்டர்கள் வருத்தப்பட்டனர். நல்லவர்கள் மகிழ்ந்தனர்.
தேவர்கள் ,கின்னரர்கள்,மனிதர்கள், நாகர்கள், முநீஸ்வரர்கள் அனைவரும் ஆசிகள் வழங்கினர்.
தேவர்களின் மனைவிகள் நடனமாடிப்பாடினர். அவர்கள் கைகள்   பூக்கள்  அர்ச்சனை  செய்தன. பிராமணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். பாடகர்கள் கவிஞர்கள்
புகழ்ப்பாடலில்  வர்ணித்துக் கொண்டிருந்தனர்.
 பூமி ,பாதாளம் ,சுவர்க்கம் மூன்று  உலகங்களிலும்
ராமர் வில் முறித்த  செய்தியும் ,சீதை வைரமாலை போட்ட செய்தியும்  புகழாகப் பரவியது. நகர ஆண்களும் ,பெண்களும் ஆரத்தி எடுத்தனர். தனது தகுதிக்கு மீறி
பொருள் கொடுத்தனர்.
  அழகும் சிருங்காரரசமும் இணைந்த ஜோடியாக ராமரும் சீதையும்  மிக எழிலாகக் காட்சி அளித்தனர்.
தோழிகள் சீதையிடம் ராமரின் சரணங்களை  தொடுவதற்கு வற்புறுத்தினர். ஆனால் சீதை அச்சத்தின் காரணமாகத் தொடவில்லை.
கௌதமரின் மனைவி அகல்யாவின்  கதி அறிந்து சீதை தன்
கரங்களால் கால்களைத் தீண்டவில்லை.
சீதையின் அலௌகீக  அன்பு கண்டு ராமர் மனதில் சிரித்தார்.

No comments: