Saturday, January 28, 2017

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு

ஸ்ரீ ராமசரித மானஸ்--பாலகாண்டம் --அறுபத்திரண்டு

    அஹல்யாவிற்கு மோக்ஷம் அளித்து அங்கிருந்து
முனிவருடன்      புனித கங்கை ஓடும் இடத்திற்கு   சென்றனர்.  மகாராஜ் காதியின் புத்திரரான  விஷ்வாமித்திர ரிஷி தேவகங்கா   பூமியில்தோன்றிய கதையைச்  சொன்னார்.

 பிரபு ராமச்சந்திரரும் ,லக்ஷ்மணனும் ,முனிவரும்
 கங்கையில்   ஸ்நானம்  செய்தனர்.
அந்தணர்களுக்கு விதவிதமான தானங்கள்  கொடுக்கப்பட்டது.
 முனிவருடன் மிக மகிழ்ச்சியாக  விரைவில்
 ஜனகபுரியை அடைந்தனர்.
  ஸ்ரீ ராமரும் லக்ஷ்மணரும்  ஜனகபுரியின்  அழகைக்கண்டு
மிகவும்  மகிழ்ந்தனர்.
அங்கே அனேக அழகான குளங்கள் ,
கிணறுகள், நதிகள் , குட்டைகள் இருந்தன.
அங்கு இறங்குவதற்கு  அழகான படிகள் இருந்தன.
தண்ணீர் அமிர்தம் போன்று இருந்தது.
 வண்டுகள்   மகரந்த ரசத்தால்
 ஆனந்தமடைந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன,
வண்ண-வண்ண பறவைகள் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன.
பல  வண்ணங்களில்  தாமரைகள் மலர்ந்திருந்தன.
எப்பொழுதும்  சுகமளிக்கின்ற  குளிர்ந்த , மந்தமான,
மணமுள்ள  காற்று  வீசிக்கொண்டிருந்தது.
நந்தவனங்களிலும் , தோட்டங்களிலும் ,வனங்களிலும்
அதிக பறவைகள்  வசிக்கின்றன.
மலர்களாலும்  பழங்களாலும்  நிறைந்த மரங்கள் நகரத்தை மேலும் அழகு படுத்தின.

    சென்ற இடமெல்லாம்  மனத்தைக் கவர்வதாக இருந்தது.
பிரம்மாவே தன் கைகளாலேயே செய்தது போன்ற
அழகான  கடைத்தெருக்கள், மணிகள் கட்டிய அழகான
துருத்துமாடங்கள்.

குபேரனைப்  போன்ற  மேன்மை பொருந்திய வணிகர்கள்
எல்லாவிதமான பொருட்களை விற்பனைக்காக  கொண்டுவந்திருந்தனர்.
அழகான நாற்சந்திகள், தெருக்கள்  எப்பொழுதும் நறுமணத்துடன்  இருந்தன.

 எல்லோருடைய  வீடுகளும் மங்களகரமாக இருந்தன.
வீடுகளில்  மிக அழகான சித்திரங்கள்
 காமதேவனே வந்து தீட்டியதுபோல் இருந்தன.
நகரத்தில் இருந்த ஆண்கள் -பெண்கள்  அழகானவர்களாகவும் , பவித்திரமாகவும் , சாது குணம் உள்ளவர்களாகவும் , ஞானிகளாகவும் ,ஒழுக்கம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.
 ஜனகரின் அழகான அரண்மனை கண்டு தேவர்களும் பிரமித்து நின்று ரசிப்பார்கள்.
அரண்மனையின் மதில்  சுவர்கள் அனைத்து
 உலகில் உள்ள அழகையும் தடுத்து நிறுத்துவதுபோல்  ஆச்சரியப்படும்படி இருந்தன.

  அழகான ஒளிபொருந்திய மாளிகையில்
 திரைச்சீலைகள்   மணிகள்  பதித்து  மிக நேர்த்தியாக இருந்தன.
 சீதை வசித்த அழகான மாளிகையை வர்ணிக்கவே முடியாது.
அரண்மனையின் ஒவ்வொரு   வாயிற் கதவும்   மிகவும் உறுதிவாய்ந்ததாகவும், மணிகள் பதித்தும்
மிக அழகாக இருந்தன.
அங்கு  அரசர்கள், நட்டுவனார்கள் ,
அரசரின் புகழ் பாடுபவர்கள், பாடகர்கள் போன்றோரால்
நிரம்பி வழிந்தது.
 யானைகளுக்கு பெரிய கஜசாலைகள்
மற்றும் குதிரை லாயங்கள்  மிகப் பெரியதாக  இருந்தன.
தேர்களும் நிரம்பி இருந்தன.

அங்குள்ள மிகப்பெரிய  சூர-வீரர்கள் , அமைச்சர்கள், சேனாபதிகள்  அனைவருக்குமே  அரண்மனை போன்றே
மாளிகைகள்  இருந்தன.
நகரத்தின்  அருகில்  உள்ள  குளக்கரையிலும்  நதிக்கரையிலும் அதிக அரசர்கள்
 கூடாரம் போட்டு தங்கி இருந்தார்கள்.
  அங்குள்ள மாந்தோப்புகள்  பார்த்து
அதன் அழகில் மயங்கி
விஷ்வாமித்திரர் மனதில் அங்கேயே
 தங்கவேண்டும் என்ற
ஆசை உண்டாகியது.
 இந்த    ஆவலை ராமரிடம் வெளிப்படுத்தினார்.
நல்லது என்று கூறி ஸ்ரீராமர் அங்கேயே முனிவர்களுடன் தங்கினார்.
  மிதிலையின்  அரசர்  ஜனகர் ,    ரிஷி  விஷ்வாமித்திரர், வருகை   அறிந்து   அவரை வரவேற்க நாணயமுள்ள , விசுவாசமுள்ள அமைச்சர்கள், மிகுந்த  போர்வீரர்கள்,
சிறந்த அந்தணர்கள், குரு, மேலும் தன் இனத்தின் மேன்மை பொருந்தியவர்கள்  அனைவரையும் அழைத்துக்கொண்டு
சென்றார்.
    ஜனகர்    ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
முனிவர்களின் அரசனான விஷ்வாமித்திரர் ஆசீர்வதித்தார்.
பிறகு அனைத்து அந்தணர்கள் குழுவிற்கும் நமஸ்காரம் செய்தார். தன்னை பெரிய பாக்கியசாலியாக எண்ணி மகிழ்ந்தார்.
நலம் விசாரித்து  விஷ்வாமித்திரர்  அரசரை அமரவைத்தார்.
அப்பொழுது பூந்தோட்டம்  பார்க்கச்சென்ற இரு சகோதரர்களும்  அங்கே வந்தனர்.

 

No comments: