Tuesday, November 26, 2013

நாமதேவர் இறைவனைக் கண்ட காட்சியை விவரித்து இறைவன் க்ருபை பெற "நாம " ஜெபத்தின் மகத்துவத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.இறைவனின் நாம ஜபம் என்னைப்போன்றவர்களுக்கு ஆதாரம். குருடனுக்கு அவன் தடி உதவுவது போல்,பகவானின் நாம ஸ்மரணை ஒன்றே எனக்கு ஆதாரம்.இறைவனே!நீ தயை நிறைந்தவன்.
நீ தான வீரன்.நீ எனக்கு அக்கம் பக்கத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறாய்.நீ தான் பணக்காரன்.இந்த அவனியில் கொடுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை. நீ ஞாநி,அறிவுள்ளவன்,எதிர்காலத்தை நிர்ணயிப்பவன்.உன் செயலாற்றலையும் ,உன் சாமார்த்தியத்தையும் எப்படி வர்ணிக்க இயலும்?

ஹே சுவாமி! என் பரமேஸ்வரா!ஹே ஸ்ரீ ஹரி! அவனியில் அனைவரையும் நீ மட்டும் தான் க்ஷமிக்க (மன்னிக்க)முடியும்.அஸ்வமேத யாகம்,ஸ்வர்ண துலா தானம்,திரிவேணி ஸ்நானம்,இந்த கிரியைகள் எல்லாம் பகவானின் நாம சங்கீர்த்தனத்திற்கு
சமமாகாது.
ஹே சஞ்சலமான மனமே!நீ ஒரே ஈடுபாட்டுடன் பகவானை மட்டும் பஜனை செய்!
கயையில் சென்று பிண்ட தானம் செய்வது,காசியில் வசிப்பது,நான்கு வேதங்களைப் படிப்பது,மத சடங்குகளைச் செய்வது,இடைவிடாது ஆறுவித கர்மங்களில் மூழ்கி இருப்பது,சிவ -சக்தி சம்பாஷனை கேட்பது
இவை எல்லாம் வெளி வேஷம் .வீணானது.இதனால் ஆத்மா வளர்ச்சி அடையாது.மனதே!இந்த கிரிகைகளில் ஈடுபட பின் தொடராதே.
குரு அருளால் இந்திரியங்களைக் கட்டுப்படுத்து.ஐம்புலன் கட்டுப்பாடுதான்
மிகப்பெரிய கர்மம்.குரு உபதேசத்தாலும் தொடர்பாலும் புலன்களை வெல்வதால் இந்தப் பிறவிப் பயன் கிடைக்கும்.புலனடக்கத்துடன்
எல்லா வேறுபாடுகளையும் மறந்து கோவிந்தனை ஜபிக்கவும்.
இந்த உலகக் கடலில் இருந்து கரை சேர அகண்ட பாராயணமே வழியாகும்.
வெளி ஆடம்பர மற்ற நாம ஸ்மரணை தான் இறைவன் அருளுக்கு அவசியமானது.

No comments: